இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஒருவர் ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொற்று நோய்களுக்கான பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரவீந்திர குப்தா என்ற விஞ்ஞானி ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது ‘ஒமிக்ரான்’ வைரஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்ட ரவீந்திர குப்தா பரபரப்பு தகவல்கள் சிலவற்றையும் பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் ‘ஒமிக்ரான்’ வைரஸ் அதிக அளவு தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகும் மிக சாதுரியமாக பரவி வருவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ஒமிக்ரான் வைரஸ் லேசான பாதிப்பை தான் ஏற்படுத்தும் என்பதற்கான எந்த ஆதாரமும் ஆய்வில் இல்லை என்று கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அடுத்து புதிதாக உருமாறும் புதிய வகை கொரோனா வைரஸ் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் உருமாறும் புதிய வகை கொரோனா ஒமிக்ரான் வைரசின் பண்புகளை கொண்டிருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று ரவீந்திர குப்தா கூறியுள்ளார். எனவே மக்கள் அனைவரும் ஒமிக்ரான் வீரியம் குறைவாக இருக்கும் போதே தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.