தமிழகத்தின் காங்கிரஸ் கட்சி தலைவரான கே எஸ் அழகிரி, பாஜகவினர் பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று கூறி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே எஸ் அழகிரி, பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் மக்கள் கூடவில்லை என்பதால் தான் அவர் பயணத்தை ரத்து செய்திருக்கிறார். அதனை மறைப்பதற்காகவே அவர்கள் நாடகமாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இதுபற்றி அவர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “பிரதமர், பஞ்சாப் பயணம் மேற்கொண்டதை அரசியலாக்கி, முடிந்தவரைக்கும் லாபத்தை தேடும் முயற்சி தான் சமீபத்தில் நடந்திருக்கிறது.
இது முன்பே திட்டமிடப்பட்ட நாடகமாக இருக்குமோ? என்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. பிரதமருக்கான பாதுகாப்பு பணியில் இருக்கும் எஸ்பிஜி என்ற சிறப்பு பாதுகாப்பு படையினர் 122 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலையில் பிரதமர் பயணிப்பதற்கு இறுதியில் சில நிமிடங்களில் எவ்வாறு அனுமதி வழங்கினார்கள்? என்பது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியிருக்கிறார்.
மேலும், அவர்கள் சாலை வழி பயணத்திற்கு அனுமதி வழங்கியிருக்கக்க கூடாது. பிரதமரின் வாகன அணிவகுப்பின் போது, 5 நிமிடங்களுக்கு முன்பாக எச்சரிக்கை வாகனம் செல்லும். எதிரில் வாகனங்கள் வந்தாலும், சாலையில் போராட்டங்கள் நடைபெற்றாலும், அதற்கு முன்பாகவே பிரதமரின் வாகன அணிவகுப்பை நிறுத்தியிருக்கலாம். அதை ஏன் செய்யவில்லை?
போராட்டக்காரர்களுக்கு அருகே போய் நின்று கொண்டு, பிரதமரின் வாகனத்தை மேம்பாலத்தில் எதற்காக நிறுத்தினார்கள்? இது கடும் பாதுகாப்பு மீறல் தானே? என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், மேம்பாலத்தின் மேல் பிரதமரின் கார் 20 நிமிடங்களாக காத்து நின்ற போது அருகில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் ஒன்றுகூடி கொடிகளை அசைத்து பிரதமருக்கு வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.
அது புகைப்படங்களாக வெளிவந்துள்ளது. பிரதமரின் காருக்கு அருகில் நின்றது பாஜகவினர் தான். ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆகவே பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று சொல்வது அரசியல் ஆதாயம் தேடுவதற்கு தான் என்று அப்பட்டமாக தெரிகிறது. எஸ்.பி.ஜி, பிரதமரின் காருக்கு மிகவும் அருகில் பாஜகவை சேர்ந்தவர்கள் நெருங்குவதற்கு எவ்வாறு அனுமதி வழங்கினார்கள்? என்று கேட்டிருக்கிறார்.