புகையிலை பொருட்கள், மது விற்பனை செய்த 18 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக தூத்துக்குடி, திருச்செந்தூர், விளாத்திகுளம் ஆகிய உட்கோட்டத்தில் தலா ஒருவரும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 2 பேரும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 6 பேரும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 3 பேரும் மற்றும் மதுவிலக்கு காவல்துறையினரால் 4 பேர் என மொத்தம் 18 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து 46 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 85 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.