முறையான ஆவணங்களை இணைத்த விவசாயிகளுக்கு முகாமில் வைத்து பெயர் மாற்றம் செய்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் திருப்பத்தூர் வட்டம் சார்பில் வெங்களாபுரம் கிராமம் துணை மின் நிலைய வளாக செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதிய விவசாய மின் இணைப்பு பெற வேண்டி விண்ணப்பம், பெயர் மாற்றம் செய்ய விரும்பும் விவசாயிகள் மற்றும் மின் நுகர்வோர்கள் வருவாய் ஆவணங்களை வருவாய்த்துறையிடம் பெற்று பெயர் மாற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் நடந்த சிறப்பு முகாமுக்கு செயற்பொறியாளர் வி.சுப்பிரமணி தலைமை தாங்கியுள்ளார்.
இதில் உதவி செயற்பொறியாளர் வி. பிரபு வரவேற்றுள்ளார். அதன்பின் மேற்பார்வையாளர் பன்னீர் செல்வம் விவசாயிகளுக்கு பெயர் மாற்றி வழங்கியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, முதலமைச்சர் 1,00,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். தற்போது நடைபெறுகின்ற முகாமில் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கும் நபர்கள் உரிய ஆவணங்கள் அளிக்க வேண்டும்.
பின்னர் அதன்படி முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதனை அடுத்து தட்கல் முறையிலும் பணம் கட்டி விவசாயிகள் மின் இணைப்புகளை உடனடியாக பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த முகாமில் 100 நபர்கள் மனு அளித்துள்ளனர். மேலும் அதில் முறையான ஆவணங்களை இணைத்த விவசாயிகளுக்கு முகாமிலேயே பெயர் மாற்றம் செய்து வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.