தகராறை தட்டிக்கேட்ட வியாபாரியை அடித்துக் கொலை செய்த தொழிலாளி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தவசிபுரம் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தட்டார்மடம் பஜாரில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பூசாரியான மாணிக்கம் என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தசாமிக்கும் மாணிக்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் மற்றும் அவரது நண்பரான ஹரிராமன் ஆகியோர் சேர்ந்து கோவிந்தசாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டார்மடம் பகுதியில் வசிக்கும் வியாபாரியான ராமநாதன் என்பவர் அங்கு வந்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம் மற்றும் ஹரிராமன் ஆகியோர் ராமநாதனை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த ராமநாதனை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சாத்தான்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஹரிராமன் சென்னையில் வேலை பார்த்து வந்ததும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து வந்து சாத்தான்குளத்தில் கட்டிட வேலை பார்த்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் ஹரிராமன் மீது சென்னை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மாணிக்கம் மற்றும் ஹரிராமன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.