பள்ளி மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளிகரட்டுமடம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் பணிபுரியும் தமிழாசிரியர் அசோக் என்பவர் அந்த மாணவியின் வாட்ஸ்-அப்புக்கு ஆபாச பதிவுகளும், ஆபாச படங்களையும் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவி பெற்றோர், ஆசிரியர்களிடம் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் தொடர்ந்து ஆசிரியர் அசோக் மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதுகுறித்து சிலர் குழந்தை பாதுகாப்பு மையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் உடனே உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவியை அழைத்து விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் அசோக் மாணவியின் வாட்ஸ்-அப்புக்கு அனுப்பிய தகவல்களை ஆய்வு செய்தனர். அப்போது ஆசிரியர் அசோக் ஆபாச வார்த்தைகள் மற்றும் ஆபாச படங்களை மாணவிக்கு அனுப்பியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அசோக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியர் அசோக் வேறு மாணவிகள் யாருக்காவது பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாரா? என தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.