மண்ணெண்ணெய் முறையாக வழங்காததால் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழைய உச்சிமேடு கிராமத்தில் 500-க்கும் அதிகமாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் இவர்களுக்கு பகுதி நேர ரேஷன் கடையின் மூலமாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக ரேஷன் கடை விற்பனையாளர் அம்பிகா புது உச்சிமேடு ரேஷன் கடையில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பை மினி லாரியில் எடுத்து வந்திருக்கிறார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் 60-க்கும் அதிகமானோர் திடீரென ரேஷன் கடையின் முன்பாக அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றி அவர்கள் கூறியதாவது, இப்பகுதியில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் முறையாக வழங்கவில்லை என தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் கடந்த நவம்பர் மாதம் புகார் தெரிவித்திருந்தோம். அப்போது மாதந்தோறும் மண்ணெண்ணெய் முறையாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் கடந்த 2 மாதங்களாக மண்ணெண்ணையை முறையாக வழங்கவில்லை. ஆதலால் மண்ணெண்ணெய் வழங்கினால் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த குடிமைப்பொருள் தாசில்தார் வெங்கடேசன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் இனிவரும் காலங்களில் மண்ணெண்ணெய் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து தொற்றுகளை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.