கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்திற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. அன்று மதியம் 2:29 மணி அளவில் மகர சங்கராந்தி பூஜை நடைபெறும். கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கிய மகரஜோதி சீசனில் அதிகமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த சீசனில் 8 நாட்களில் 14.65 லட்சம் பேர் தரிசனம் செய்து உள்ளனர். மேலும் 25.8 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
சன்னிதானம் பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் தேவசம்போர்டு அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் இணைந்து மகரஜோதி தரிசனத்திற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். பாண்டி, தாவளம், மாளிகைப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் அமர்ந்து ஜோதி தரிசனம் நடத்துவதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகரஜோதி நாளில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பக்தர்கள் சன்னிதானத்தில் இருப்பார்கள் என்ற கணக்கின் அடிப்படையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சூரியன், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கிடைக்கும் முகூர்த்தத்தில் சபரிமலையில் மகர சங்கராந்தி பூஜை நடைபெறுகிறது. இந்த ஆண்டு 14 -ஆம் தேதி மதியம் 2:29 மணி அளவில் இந்த பூஜை நடைபெறுகிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு நேரடியாக ஐயப்பனின் விக்கிரகத்தில் அபிஷேகம் செய்யப்படும்.