பொதுமக்கள் ஆர்டர் செய்த செல்போன்களை திருடிய குற்றத்திற்காக டெலிவரி பாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஞானசேகர் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைனில் பொதுமக்கள் ஆர்டர் செய்த 11 செல்போன்கள் காணாமல் போனதை கண்டு ஞானசேகர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஞானசேகர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரியும் தினேஷ் என்பவர் செல்போன்களை திருடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தினேஷை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்த 2 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.