கொரோனா சிகிச்சைக்கு பயந்து வாலிபர் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி குடியிருப்பில் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மேல் பரிசோதனைக்காக சுகாதார அலுவலர்கள் வாலிபரை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை முடிந்து வெளியே நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்த அந்த வாலிபர் திடீரென காணாமல் போய்விட்டார்.
இதுகுறித்து திருவொற்றியூர் மண்டல சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வார்டு சுகாதார அதிகாரி சுனாமி குடியிருப்பில் இருக்கும் வாலிபரின் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் கொரோனா சிகிச்சைக்கு பயந்து வாலிபர் மருத்துவமனையிலிருந்து ஓட்டம் பிடித்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த எண்ணூர் காவல்துறையினர் வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.