ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியில் ஆட்டோ டிரைவரான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுனிதா செல்வராஜை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து செல்வராஜ் தனது மனைவி வேலை பார்க்கும் கடைக்கு சென்று மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.
ஆனால் சுனிதா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் நடுரோட்டில் வைத்து தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறியுள்ளார். இதனால் செல்வராஜூடன் சேர்த்து ஆட்டோவும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து படுகாயமடைந்த செல்வராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.