தீ விபத்தில் 8 தொழிலாளர்களின் வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் தனியார் நிறுவன காப்பி தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளும் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீடுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, நகை, பணம், சான்றிதழ், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள் போன்ற அனைத்துமே எரிந்து நாசமாகிவிட்டது. இந்த தீ விபத்தில் நட்ராஜ், சுரேஷ், தனம், ராஜேந்திரன் உள்பட 8 தொழிலாளர்களின் வீடுகள் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.