தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக இரவு நேர ஊரடங்கு, ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல், ஞாயிறு முழு ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை என பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் டாஸ்மாக் கடைகள் பற்றி வாய் திறக்கவில்லை.
புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு
கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் எத்தனை சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில் தான் மதுக்கடைகளை திறக்க வேண்டுமே அன்றி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து மது கடைகளை திறக்கக் கூடாது என்று திமுக அப்போது வாதிட்டது. நேற்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின்படி சுமார் 8 % பேர் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு பக்கம் பள்ளி கல்லூரிகளை மூடவும், வழிபாட்டு தளங்களை வாரத்தில் 3 நாட்கள் மூடவும் உத்தரவிட்டு விட்டு மறுபக்கம் மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவாது.
மாறாக அது அதிகரிக்கவே வழிவகுக்கும். பிப்ரவரி மாதத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் என வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு, கொரோனா மூன்றாவது அலையை ஓரளவுக்காவது தடுக்கும் வகையில், வைரஸ் பரவல் 5% கீழ் செல்லும் வரையிலாவது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவித்தார்.