தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் மற்றும் அதனை சார்ந்த பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால், பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்க உள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உருமாறிய ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது, கடைகள் செயல்படும் நேரத்தை குறைப்பது, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போக்குவரத்து சேவை, அரசு விரைவுப் பேருந்துகளின் சேவையை தடை செய்வது, வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துவது, சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிப்பது மற்றும் கடற்கரையில் பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மாலை வெளியாகும். புதிய கட்டுப்பாடுகள் நாளையே அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.