நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. கொரோனாவிற்கு எதிராக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான சிறார்களுக்கு கடந்த 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 3-வது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் 5 கோடியே 75 லட்சம் பேர் இந்த தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி உடையவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் அதற்கு முன்பு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.