சபரிமலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பக்தர்கள் சென்ற கார் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் கிங்கேரி பகுதியை சேர்ந்த பிரணவ், சதீஷ், அருண், சந்தோஷ்குமார், லட்சுமிகாந்த், லோகேஷ் ஆகிய 6 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காரில் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது பழைய பயணியர் மாளிகை அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பட்ட டயர் திடீரென வெடித்துள்ளது.
இதில் கட்டுபாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் சந்தோஷ்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் சதீஷ், அருண், லோகேஷ், பிரணவ், லட்சுமிகாந்த் ஆகிய 5 பேர் லேசான காயங்களுடன் உயர்தப்பியுள்ளனர். இதனையறிந்த புதுசத்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தொஷ்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.