கடந்த 2014-ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் என்ற நிறுவனம் மோடியை பிரதமராக்கி ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் தேர்தல் வியூகங்களை வகுக்க இந்திய அரசியல் களத்தில் இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியை நாடவேண்டிய சூழல் வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஐபேக் நிறுவனத்தின் பின்னால் செல்ல தொடங்கியது.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கு பிரசாந்த் கிஷோர் தான் பல்வேறு வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். ஆனால் பிரசாந்த் கிஷோரின் செயல்பாடுகள் திமுக மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது. அதாவது தனது உத்தரவின்படி தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று திமுக மூத்த தலைவர்களிடம் கறாராக பேசி வந்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் பிரசாந்த் கிஷோர், தான் கேட்ட கட்டணத்தையும் முறைப்படி வழங்க வேண்டும் என்று சொன்னதால் திமுக தரப்பில் இருந்து கடும் சிக்கல் ஏற்பட்டது. மேலும் திமுக கட்சிக்குள் பலரும் பிரசாந்த் கிஷோர் வேண்டாம் என்று குரல் எழுப்ப ஆரம்பித்தனர். இருப்பினும் ஸ்டாலின் போட்ட உத்தரவால் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைகளை வருகின்ற 2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் திமுகவுக்கு 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது சில கசப்பான அனுபவங்கள் கிடைத்ததால் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பிரசாந்த் கிஷோர் இந்திய அரசியலில் அடுத்த பல ஆண்டுகளுக்கு பாஜக மிகப்பெரிய சக்தியாக விளங்கும் என்று கோவா சட்டமன்ற தேர்தலின் போது பேசியதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால் ஸ்டாலின் பிரசாந்த் கிஷோரை கழட்டி விட முடிவெடுத்துள்ளதாகவும், திமுகவுக்கு என தனியாக அரசியல் பகுப்பாய்வு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.