சைப்ரஸ் நாட்டில் டெல்டாகிரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்டா பரவல் ஓய்ந்த நிலையில், ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வேரியண்ட் பெரிய அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் கூட பல மடங்கு வேகமாக பரவி வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சைப்ரஸ் நாட்டில் டெல்டாகிரான் என்ற புதிய வகை வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது டெல்டா மற்றும் ஒமைக்ரான் ஆகிய இரு வைரஸ்களின் திரிபாக இதை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது குறித்த தகவலை சைப்ரஸ் உயிரி அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் வெளியிட்டுள்ளார். இந்த புதிய வகை வைரஸால் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் பரவல் விகிதம் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.