கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஆதித்யா(25) என்பவர் வசித்துவருகிறார். இவரின் கணவர் நிதின். இவர் சிறுவயதிலிருந்தே மெஹந்தி கலை மீது அதிகம் ஆர்வம் கொண்டு மெஹந்தி சாதனையாளராக மாற வேண்டும் என்று எண்ணியுள்ளார். அதனைத் தொடர்ந்து கணவர் நிதியின் ஆதரவுடன் ஆதித்யா உலக சாதனை முயற்சிகளை மேற்கொண்டார். ஏழு உலக அதிசயங்களை வெறும் 12 நிமிடங்கள் மெஹந்தியாக வரைந்து அடுத்தடுத்த சாதனைகளை படைத்தார். இது ஏசியன் மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று கடலுண்டியில் உள்ள சி.எம்.ஹெச்.எஸ். மைதானத்தில் நடைபெற்ற மெஹந்தி போட்டியில் இவர் கலந்து கொண்டார். அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு விதவிதமான மெஹந்திகளை கைகளில் வைத்துக் கொண்டனர். அப்போது ஆதித்யா ஒரு மணி நேரத்தில் 910 கைகளில் மெஹந்தி வரைந்து முடித்தார். இதன் மூலம் அவர் குறுகிய நேரத்தில் அதிக மெஹந்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இந்த முயற்சியை கின்னஸ் உலக சாதனை அமைப்பின் குழு வீடியோ மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. இதற்கு முன்பாக இங்கிலாந்தில் ஒரு மணி நேரத்தில் 600 மெஹந்திகளை சமினா உசேன் என்ற பெண் வரைந்தார். இதனை தற்போது ஆதித்யா முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.