தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். உலகம் முழுவதுமே கொரோனா மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அதிதீவிரமாக பரவிவருகிறது. டிசம்பர் 26-ம் தேதி வரை தினசரி கொரோனா பாதிப்பு ஜனவரி 1-ஆம் தேதி 1,489 பேர் பாதிக்கப்பட்டனர்.
ஜனவரி 9-ஆம் தேதி 12,895 பேர் பாதிக்கப்பட்டனர். தொற்று அதிகரிப்பால் ஜனவரி 6-ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு தான் அனுமதிக்கப்படுகின்றனர். மெரினா உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் இன்று முதல் முடிவுக்கு வருவதால் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. பாதிப்பு ஒரு பக்கம் அதிகரிக்க பொங்கல் பண்டிகை வருவதால் மக்கள் பேருந்து நிலையங்களிலும், சந்தைகள், கடைவீதிகளில் ஒன்றுகூட அதிக வாய்ப்புள்ளது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நேற்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதை சனி ,ஞாயிறு என இரு தினங்களுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. நீண்ட தூர பேருந்து போக்குவரத்தை சில நாட்கள் நிறுத்தலாம் என்று கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி பெரிய கூட்டம் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டால் நிலைமை மீண்டும் கை மீறிப் போய் விடும் என அச்சம் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அதனால் நீண்ட தூரம் பேருந்து பயணத்தை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறையை கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறுகிறார்கள். இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.