அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாலியல் தொழிலாளிகளுக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவை வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தர்பார் மகிளா ஒருங்கிணைப்பு குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கொரோனா தொற்று அதிகம் இருந்த காலகட்டத்தில் பாலியல் தொழிலாளிகள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வந்ததாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணையின் போது, பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன்கார்டு மற்றும் அடையாள அட்டைகளை அளிக்க வேண்டுமென்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆணையிட்டது. மேலும் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை வழங்குவது தொடர்பான நிலை அறிக்கையை இன்று முதல் 4 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் பாலியல் தொழிலாளர்களுக்கு எந்த ஆவணமும் இல்லாமல் ரேஷன் பொருள்களை வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாலியல் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு ஆவணங்களின்றி ஆதார் எண் வழங்க வேண்டும் என்று ஆதார் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாலியல் தொழிலாளிகளுக்கு அடையாள அட்டை இல்லாமல் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.