தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி முறையில் வகுப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இது தொடர்பான விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. ஆகவே முக்கியமான உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வலுவூட்டல் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ளது. முன்பே திட்டமிட்டபடி நேற்று (ஜனவரி 10) தொடங்கி வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி வரை அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இதன் மூலமாக மாணவர்களின் கற்றல் அடைவுகள் உறுதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சியை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சகத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சா.அருணன் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஆசிரியர்களுக்கான திறன் வலுவூட்டல் பயிற்சி வகுப்பு நடத்துவது வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் 59% மட்டுமே பணிக்கு வந்தால் போதும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பல்கலைக்கழகத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நெருக்கடியான சூழலில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு தேவையா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் பயிற்சியில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்பர். இதன் காரணமாக கொரோனா நோய்த்தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே ஆசிரியர்கள் நலன் கருதி திறன் வலுவூட்டல் பயிற்சி வகுப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.