தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டிக்கவும், ஜனவரி 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காணும் பொங்கல் அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தவும் மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.