ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில், தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த வாரங்களில் ஆந்திராவில் பெய்த கனமழையால் திருமலை பகுதி முழுவதும் பெரும் வெள்ளம் சூழ்ந்தது. கோயில் வளாகம் மழைநீரில் சூழ்ந்ததது. அதனால் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியது. இதை எடுத்து டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மழை நின்றவுடன் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஆன்லைன் டிக்கெட் பெற்றவர்கள் 6 மாதம் வரை தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டதையடுத்து வருகிற 13-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும் பத்து நாட்களும் சாமி தரிசனம் செய்ய ஒரு நாளைக்கு 5000 வீதம் 50 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து இலவச தரிசன டோக்கன் வாங்கிக்கொள்ளலாம் இதற்காக மூன்று தரிசன டோக்கன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.