கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை என்றால் அவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் உடல் வலி உள்ளவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்தல் அவசியம்.
மேலும் அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும் தொடர்பில் இருந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக அல்லது இணை நோய் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் ஆகியோருக்கு பரிசோதனை முக்கியம். அதேசமயம் இந்த பாதிப்புகள் எதுவும் இன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை. வீட்டு தனிமையில் உள்ளவர்கள் குணமடைந்தாலும் மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையும் மேற்கொள்ளத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.