மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே பொதுப் பாதையை ஆக்கிரமித்து தனியார் மதுபான விடுதிக்கு பாதையாக பயன்படுத்திவரும் ஆக்கிரமிப்பை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஷாஜகான், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,” 1997ஆம் ஆண்டு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள 22 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினேன். அதில் 11 சென்ட் நிலத்தை வாடகைக்கு விட்ட நிலையில் 11 சென்ட் நிலத்தை நாங்கள் பயன்படுத்துகின்றோம். இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள பொதுச் சாலையை பயன்படுத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கழிவறைகள் மற்றும் தனியார் மதுபான விடுதிக்கு பாதையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை அகற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்தபோது, அதன் அடிப்படையில் நான்கு வாரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஆனால், அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆகவே நீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தாத மாவட்ட அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட பொதுப் பாதையை ஆக்கிரமித்து மதுபான விடுதி நடத்தி வருவதால் யாரும் பொதுப் பாதையை பயன்படுத்த முடியவில்லை என மனுதாரர் வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தரப்பில், ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரர் குறிப்பிட்டுள்ள பாதையில் ஆக்கிரமிப்பு உள்ளது கண்டறியப்பட்டு உறுதி செய்யபட்டுள்ளது. விரைவில் அலுவலர்கள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றபடும் என உறுதியளிக்கபட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் ஜனவரி 21ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.