இலங்கை அரசாங்கத்திற்கு வெளிநாட்டு கடன் அதிகமாக இருக்கும் நிலையில் அன்னிய செலவாணி தட்டுப்பாட்டால் கடன்களை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இலங்கை நாட்டில் அன்னிய கடன்கள் 3,600 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. மேலும், 160 கோடி டாலர்களாக அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்திருக்கிறது. இந்த வருடத்தில் மட்டும் 730 கோடி டாலர் அளவிற்கு அன்னிய மற்றும் உள்நாட்டு கடன்களுக்கான வட்டியும் அசலும் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
மருந்து பொருட்கள், உணவுப் பொருட்கள், ரசாயன உரங்கள் மற்றும் கச்சாஎண்ணெய் உட்பட பல அத்தியாவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான டாலர்களுக்கும் தட்டுப்பாடு உண்டாகியிருக்கிறது. உடனடியாக இந்த தேவைகளை ஈடு செய்வதற்கு 43.7 கோடி டாலர்கள், இம்மாத கடைசியில் புதிதாக கடன் பெற வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஈரான் நாட்டிலிருந்து, இறக்குமதியாக்கப்பட்ட கச்சா எண்ணெய்க்கு, பதிலாக ஒவ்வொரு மாதமும் 50 லட்சம் டாலர்கள் மதிப்புக்கொண்ட தேயிலையை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், 3 நாடுகளில் இருக்கும் இலங்கை தூதரகங்களை அடைத்து அதன்மூலமாக டாலர் செலவுகளை குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சீனா வழங்கிய 500 கோடி டாலர்கள் கடனை திருப்பிக்கொடுக்க கால அவகாசம் தருமாறு கோரி இருக்கிறது.