Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு!!!!

பெங்களூரு: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் வலுத்து வரும் நிலையில், கர்நாடகா மாநிலம் முழுவதும் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு திடீரென அமல்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன், இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து இந்த மசோதா சட்டமானது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர். போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் காவல் துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

மேலும் மத்திய, மாநிலக் கட்சிகளும் இதனைக் கடுமையாக எதிர்த்து வாதம் செய்து வருகின்றனர். தங்களின் எதிர்ப்புணர்வை போராட்ட ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள டவுன் ஹாலில் இடதுசாரி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளன.

இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் 144 தடை உத்தரவு திடீரென அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக, பெங்களூரு நகரம் மற்றும் அதன் மாவட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்த தடை உத்தரவு இன்று முதல் டிசம்பர் 21ஆம் தேதி முதல் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தர்வாட், மங்களூரு, சிவமோக், கோலார், மைசூரு, தவாங்கர், பெல்ஹாவி, கடாக், விஜயபுரா மற்றும் தும்கூர் ஆகிய ஊர்களிலு நாளை காலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வர இருக்கிறது. பெல்காம் மாவட்டத்தில் காவல் ஆணையர் உத்தரவின் படி இன்று இரவு 9 மணி முதல் 144 தடை உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி இப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிக்மங்களூரில் நேற்று (டிசம்பர் 18) மாலை 6 மணி முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கலாபுராகியில் நாளை காலை ஆறு மணி முதல் டிச.21ஆம் தேதி இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |