தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை ஜனவரி 31-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜனவரி 14 முதல் 18 ஆம் தேதி வரை வழிபாட்டுத் தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவது குறித்து இதுவரை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. எனவே கொரோனா பரவலை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டுமென்றால் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பல கோரிக்கைகள் வருகிறது.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தமிழகத்தில் அதிகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தவதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனால் மதுக்கடைகளில் அதிகமாக கூட்டம் கூட வாய்ப்பு உள்ளது. இதனால் கொரோனா வைரசும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே ஜனவரி 20ஆம் தேதி முழுவதுமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அப்போது கொரோனா கட்டுப்பாடுகளுக்கான அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளும் 100% பயன் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.