நாடு முழுவதும் முதுநிலை மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “NEET PG கவுன்சிலிங் MCC ஆல் இன்று முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து , குடியுரிமை மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சகம் உறுதியளித்துள்ளது. இது கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டுக்கு மேலும் பலத்தை அளிக்கும்” என்று குறிப்பிட்டார்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னதாக முதுநிலை மருத்துவப் படிப்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பாக 8 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்படி வருமான உச்ச வரம்பை ஆராய நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்தது. இதைத்தொடர்ந்து அந்த குழு கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் மத்திய அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் “பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினர் இடஒதுக்கீடு சலுகை பெற 8 லட்சம் ரூபாய் வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது நியாயமானது” என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின் வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்று இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டது.
அதில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன் மூலமாக இந்த ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் கலந்தாய்வும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அரசியல் சாசனத்தின்படி அனுமதிக்கப்பட்டுள்ள 27 சதவீத இட ஒதுக்கீடு, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு மட்டுமின்றி தமிழக அரசும் இந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் (எம்.டி.எம்.எஸ்., டி.என்.பி) கலந்தாய்வு இன்று தொடங்கியது. அதாவது இன்று பகல் 12 மணி முதல் ஜனவரி 17ஆம் தேதி மாலை 3 மணி வரை www.mcc.nic.in இணையதளத்தில் பதிவு செய்யலாம். நாளை முதல் 17ஆம் தேதி இரவு 11.55 மணி வரை மருத்துவ இடங்களை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். மருத்துவ இடங்களை வரும் 18, 19ம் தேதிகளில் சரிபார்க்கலாம். பின் பிப்ரவரி 3, பிப்ரவரி 24, மார்ச் 11ல் கலந்தாய் நடைபெறும்.