நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒரு பெண் பொங்கல் பரிசை முதல்வருக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார்.
தமிழக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ரொக்கப்பணம் இம்முறை வழங்கப்படவில்லை.
மேலும் சில பகுதிகளில் குறைந்த பொருட்கள் தான் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் வெளிமாநிலங்களில் இருக்கும் நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்து விட்டார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் பல சர்ச்சைகளை கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இலவச பொருட்கள் எங்களுக்கு வேண்டாம் என்று கூறிக் கொண்டிருக்கிறார். அவரின் பாணியில் அக்கட்சியில் இருக்கும் ஸ்ரீ ரத்னா என்ற பெண், பொங்கல் பரிசுப்பொருட்களை முதல்வருக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். மேலும், அவர் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில், “தமிழர்களின் திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் பொங்கல் பரிசுப் பொருட்களை நான் வாங்கிக் கொண்டேன்.
துணிப்பையுடன் சேர்த்து மொத்தமாக 20 பொருட்கள் இருந்தது, நன்றி! எனினும், தமிழகத்தின் குடிமகளாய் நான் எதிர்பார்க்க கூடியது ஒருநாள் கூத்தாக முடிந்துவிடக்கூடிய, 300 ரூபாய் மதிப்புக்கொண்ட இலவச பொருட்கள் கிடையாது. பதிலாக, நாள்தோறும் என் குடும்பத்தின் தேவையை நானே நிறைவேற்றும் வகையில் ஒரு அரசு பணியைத்தான் எதிர்பார்க்கிறோம்.
அப்படி இருக்கும் பட்சத்தில், இலவச பரிசு பொருட்களை என் தனி வருமானத்தின் மூலம் வாங்கிக் கொள்ள முடியும். எனினும், தரமான இலவச மருத்துவம், தூய்மையான குடிநீர், தரமான இலவச கல்வி, தூய்மையான காற்று, கல்விக்கு தகுந்தார்போல் அரசுப் பணி, பணிக்கு தகுந்தாற்போல் சம்பளம் போன்றவற்றை தனிநபராக என்னால் பெற முடியாது.
என்னால், தனிநபரின் வருமானத்தால் பெறக்கூடிய ஒரு விசயத்தை இலவசம் என்ற பெயரில் நான் வாங்கி, என் சுயமரியாதையை இழந்தது போதும். அரசுப்பணியை படித்த இளைஞர்களுக்குக் கொடுத்து இலவசத்திற்காக கையேந்தாமல், தன்மானத்துடன் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு இலவச பொருட்கள் வேண்டாம். அரசுப்பணி தான் வேண்டும், நன்றி! என்று குறிப்பிட்டிருக்கிறார்.