அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தீவிர விசாரணைக்கு பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜேந்திர பாலாஜிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர் மீது மற்றொரு புகார் ஒன்று வந்துள்ளது.
அதாவது மதுரை மாவட்டத்தில் உள்ள கோமதிபுரத்தில் வசித்து வரும் செல்வராஜ் என்பவர் ஆவின் பாலில் வேலை வாங்கி தருவதாகக் கூறி முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தன்னிடம் ரூ.16 லட்சம் பெற்று கொண்டு ஏமாற்றியதாக விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். ஆனால் குற்றப்பிரிவு காவல்துறையினர் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பின்னர் செல்வராஜ் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2-ல் தனது புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று நீதிமன்றத்தில் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த ராஜேந்திர பாலாஜி சிறையிலிருந்து அவ்வளவு சீக்கிரமாக வெளியே போக முடியாது போலயே என்று கூறி புலம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.