அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்திய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்புயிருப்பு கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றும் அங்குள்ள பொட்டலில் வைத்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் காளைகள் 5 மாடுபிடி வீரர்களை தாக்கியுள்ளது.
இதற்கிடையே சுண்ணாம்புயிருப்பு கிராம நிர்வாக அலுவலர் ஜோதி அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விழாவை நடத்திய மகேந்திரன், ஈஸ்வரன், தினேஷ், பெரியகருப்பன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.