இந்தியாவில் கொரோனா 3-ம் அலை தொடங்கியுள்ள நிலையில் அனைவருக்கும் கொரோனா உதவித்தொகையாக 5,000 ரூபாயை மத்திய அரசு வழங்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த உதவித்தொகையை மத்திய சுகாதார அமைச்சகம் வழங்குவதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது. மத்திய அரசின் 5000 ரூ நிதியுதவியை பெற வேண்டுமெனில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அத்தகவல் பரவியது.
இதற்கான கடைசி தேதி ஜன- 15ம் தேதி என்றும் அத்தகவல் கூறுகிறது. இந்த நிலையில் கொரோனா நிதியுதவி வழங்கப்படுவதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரதுறை அமைச்சகம் கொரோனா நிதியுதவி வழங்குவதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி பொய்யானது என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் சமூக வலைதளங்களில் பரவும் அந்த செய்தியில் உள்ள இணைப்பை (Link) கிளிக் செய்ய வேண்டாம் எனவும் பத்திரிகை தகவல் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது. ஆகவே போலிச் செய்தியை மேற்கொண்டு யாருக்கும் பரப்ப வேண்டாம் எனவும் பத்திரிகை தகவல் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.