உத்திர பிரதேசத்தில் தேர்தல் மேற்கு உ.பி.யில் தொடங்கி கிழக்கு உ.பி.யில் முடிவதாக தேர்தல் ஆணையம் அட்டவணையை வடிவமைத்துள்ளது. அந்த வகையில் உத்திர பிரேதச அரசியலை உற்று நோக்கினால் மேற்கு உ.பி.க்கும், கிழக்கு உ.பி.க்கும் உள்ள வித்தியாசம் புரியும். அதாவது மேற்கு உத்திர பிரதேசத்தில் விவசாயிகளும், ஜாட் சமூகத்தவர்களும் அதிக அளவில் உள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற கலவரம் ஒன்றால் ஜாட் சமூகத்தினர் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பினர்.
அதன்படி பார்த்தால் மேற்கு உ.பி. பாஜகவிற்கு பலமாக உள்ளது. ஆனால் அதற்கு மாறாக கிழக்கு உ.பி. பாஜகவின் பலவீனமாக உள்ளது. எனவே 2017 சட்டசபை தேர்தல் மற்றும் 2019 லோக்சபா தேர்தல் இரண்டும் மேற்கு உ.பி.யில் தொடங்கி கிழக்கு உ.பி.யில் வாக்குப்பதிவு முடிவதாக தேர்தல் ஆணையம் அட்டவணை போட்டிருந்தது. ஆனால் தற்போது மேற்கு உ.பி.யில் பாஜக பலவீனம் அடைந்துள்ளது.
அதாவது பாஜகவுக்கு ஆதரவாக இருந்த ஜாட் சமூகம் தற்போது மத்திய அரசு முன்னெடுத்த முயற்சியான 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்துதல் மற்றும் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மறுத்தது உள்ளிட்ட காரணங்களால் மேற்கு உ.பி. பாஜகவுக்கு எதிராக மாறிவிட்டது. இருப்பினும் பாஜக தலைவர்கள் மேற்கோ, கிழக்கோ வெல்ல போவது மோடியின் சக்தி தான். மீண்டும் யோகி ஆதித்யநாத் ஆட்சி தான் உதிக்க போகிறது என்று உறுதியாக நம்புவதாக கூறுகிறார்கள்.