Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலிக்க மறுத்த சிறுமி…. போலியான இன்ஸ்டாகிராம் பக்கம்…. வாலிபர் போக்சோவில் கைது…!!

சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் போலியான பக்கத்தை தொடங்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெட்டாம்பூச்சிபாளையம் பகுதியில் வசிக்கும் ஜெகபிரியன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜெகபிரியன் சிறுமியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி வாலிபருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனால் கோபமடைந்த ஜெகபிரியன் ஆபாசமாக சித்தரித்த சிறுமியின் புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் போலியான ஒரு பக்கத்தை தொடங்கியுள்ளார். மேலும் எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்று ஜெகபிரியன் அந்த மாணவியின் செல்போன் எண்ணையும் அதில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த சிலர் சிறுமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் சிறுமியின் தந்தை கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெகபிரியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |