தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் நாளை முதல் 18-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தைப்பூசம் விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்த செல்லும் பக்தர்களால் பல கோவில்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக அண்மையில் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு பேருந்தில் கர்நாடகா திரும்பிய 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேல்மருவத்தூரில் நேற்று பெரும் கூட்டமாக பக்தர்கள் திரண்டதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. கோவிலுக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தி உரிய முறையில் வரிசைப் படுத்தி அனுப்பி வைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் பக்தர்கள் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை மறந்து கொரோனா குறித்த விழிப்புணர்வு காற்றில் பறந்தது.அதனைப் போலவே திருச்செந்தூர் மற்றும் பழனி உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் வார இறுதி நாட்களில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், இருக்கின்ற நாட்களில் தங்கள் விரதமிருந்து நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக குடும்பத்துடன் பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.
பேருந்துகளில் 75 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை மீறி அரசு பேருந்துகளில் கூட்டம் முண்டியடித்தது.கோவில்களில் இருந்து ஊர் திரும்பும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்கினால் பேருந்துகளில் நெரிசல் குறையும் என்று கூறுகின்றனர் பக்தர்கள். இந்த கூட்ட நெரிசலால் கொரோனா பிரசாதமாக அனைவருக்கும் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.