மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல், புகைப்படங்களை எடுத்து மிரட்டியுள்ளார். ஆனால் அந்த இளைஞனின் மிரட்டலுக்கு சிறுமி பயப்படவில்லை. அதனால் அந்த இளைஞன் சிறுமியின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். அந்தப் படங்களைப் பார்த்த சிறுமியின் உறவினர் சிறுமியின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தையே காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் கிராமத்திலுள்ள அனைத்து குடும்பங்களும் சேர்ந்து ஒரு சுற்றுலா பயணம் சென்றிருந்தோம். அப்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், இளைஞனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இளைஞன் சிறுமி வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி நடந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த சிறுமியின் அந்தரங்க படங்களையும் மொபைல்போனில் எடுத்துள்ளார். அந்த படங்களை பரப்பி விடுவேன் என்று மிரட்டிய அவர், மீண்டும் சிறுமியுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த காரணத்தினால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி அந்த இளைஞனின் மொபைல் எண்ணை பிளாக் செய்து விட்டு சந்திக்க மறுத்துவிட்டார். இதையடுத்து சிறுமியை பற்றி அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் அந்தரங்க படங்கள் பரப்பப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.