மின்சாரம் தாக்கியதில் ராணுவ வீரரின் 4 வயது மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலுமலை பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 4 வயதில் தட்சன்யா என்ற மகள் இருந்துள்ளார். தற்போது விடுமுறையில் கோபி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி தட்சன்யா வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு நடப்பட்டிருந்த இரும்பு குழாயை தொட்ட போது அவளை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சிறுமியை அருகிலிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதனை பார்த்த ராணுவ வீரர் கோபி மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த சூளகிரி காவல்துறையினர் சிறுமியின் உடலை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வீட்டின் அருகில் இருந்த மின்கம்பங்களில் குரங்குகள் விளையாடியதால் மின்கம்பிகள் தொய்ந்து, அங்கு நடப்பட்டிருந்த எர்த் இரும்பு குழாயில் உரசியுள்ளது. அதனை சிறுமி தொட்ட போது மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.