கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் விசா வழங்கும் நடைமுறையில் அமீரக அரசு பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதில் ஒரு பகுதியாக தொழில் அதிபர்கள் ,விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு துறையில் பிரபலமானவர்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகின்றது.இதில் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனிநபர் ஆதரவு இல்லாமல் ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு வசிக்கும் வகையில் இந்த கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த விசா ஒரு கவுரவமாக பார்க்கப்படுகின்றது.
மேலும் இந்தியாவை பொறுத்தவரை சினிமா பிரபலங்கள் பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர். இதற்கு முன்பாக நடிகர் ஷாருக் கான் ,மோகன்லால், மம்மூட்டி, பிருத்விராஜ் ,துல்கர் சல்மான் , தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் அமீரக கோல்டன் விசாவை பெற்றுள்ளனர். இதில் சமீபத்தில் நடிகை த்ரிஷா மற்றும் பார்த்திபன் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடிகை ராய் லட்சுமிக்கு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. இது குறித்து நடிகை ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் அமீரக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.