உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க கூடாது என தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திண்டுக்கல்லை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு பரிசாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்தால் ஜனநாயக ரீதியில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் தனது மனுவில் சுப்புலட்சுமி தெரிவித்திருந்தார்.
வாக்குகளை பெற அதிமுக திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு எந்த அடிப்படையில் பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளிக்கப்பட்டது என்று வினா எழுப்பியது. இதற்கு பதிலளித்த மாநிலத் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தங்கள் தரப்பு அனுமதி அளிக்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.
இதனால் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களிலும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேநேரம் தேர்தல் நடக்காத ஒன்பது மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தடை இல்லை என்றும் ஆணையிட்டுள்ளனர்.