வனவிலங்குகளை தடுக்க அமைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் விவசாயியான முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் முனிராஜ் விவசாய நிலத்திற்கு வழக்கம்போல் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அங்கு அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான நாகராஜ் என்பவர் தனது நிலத்தில் வனவிலங்குகள் புகுவதை தடுக்க மின்வேலி அமைத்திருந்தார். இதனை அறியாத முனிராஜ் அந்த வழியாக நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக மின்வேலியை மிதித்துள்ளார்.
இதில் முனிராஜ் மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் முனிராஜை உடனடியாக மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முனிராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து உத்தனப்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனிராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.