தமிழக முதல்வருக்கு சரியாக செயல்படாத அமைச்சர்களின் பட்டியல் அனுப்பப்பட்டிருப்பதால், அவர்கள் பதவி பறிபோகும் பயத்தில் உள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் ஆட்சியில் பல துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்படும் இலவச புத்தக பையில், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தையும் அகற்ற வேண்டாம் என்று கூறியதில் தொடங்கி சமீபத்தில் தொடங்கப்பட்ட, “மீண்டும் மஞ்சப்பை” இயக்கம் வரை ஸ்டாலினின் பல நடவடிக்கைகளில் அந்த முயற்சி வெளிப்பட்டது.
அவர் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுக்க முயன்று வரும் நிலையில், மற்றொரு புறம் அமைச்சர்கள் எந்த அளவிற்கு தனக்கு ஒத்துழைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ஒவ்வொரு மாதமும் ரிப்போர்ட் கார்டு மூலமாக ஸ்டாலின் மதிப்பீடு செய்வாராம். அதாவது, புகாரில் மாட்டிய அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்காத அமைச்சர்கள், சரியாக செயல்படாத அமைச்சர்கள் என்று வரிசைப்படுத்தி ஒவ்வொரு மாதமும் அந்த ரிப்போர்ட் கார்டு முதலமைச்சருக்கு அனுப்பப்படும்.
அதன்படி, கடந்த மாதத்திற்கான ரிப்போர்ட் கார்டு முதலமைச்சருக்கு சென்றிருக்கிறது. அதில், பத்திரப் பதிவுத் துறை அமைச்சரான மூர்த்தி, சுற்றுலாத் துறை அமைச்சரான மதிவேந்தன், தொழிலாளர் நலத்துறை அமைச்சரான சி.வி. கணேஷ் போன்றோர் சரியாக செயல்படாத அமைச்சர்களின் பட்டியலில் இருக்கிறார்கள்.
இதேபோன்று, மின்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி மற்றும் உணவுத்துறை அமைச்சரான சக்கரபாணி போன்றோரின் பெயர்கள், அதிகமாக புகார்களில் மாட்டும் அமைச்சர்களின் பட்டியலில் இருக்கிறது. எனவே இந்த அமைச்சர்கள் பதவி எந்த நேரத்திலும் பறிபோகலாம் என்ற அச்சத்தில் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.