உயிருக்கு போராடி கொண்டிருந்த குதிரையை கால்நடை மருத்துவ குழுவினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசடி சாலையில் சுற்றித்திரிந்த குதிரை மீது வாகனம் மோதியதால் அதன் பின்னங்கால்கள் உடைந்துவிட்டது. இது குறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குதிரைக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அந்த குதிரையின் உரிமையாளர் முத்துவேல் என்பவர் தனது சொந்த பொறுப்பில் குதிரைக்கு சிகிச்சை அளித்து பராமரித்து கொள்வதாக கூறி அதனை வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளார்.
இந்நிலையில் சமயநல்லூர் கட்டப்புலி நகரில் இருக்கும் புதரில் பலத்த காயங்களுடன் குதிரை ஒன்று உயிருக்கு போராடியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது உயிருக்கு போராடி கொண்டிருந்தது விபத்தில் சிக்கிய அதே குதிரை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருத்துவ குழுவினர் உடனடியாக குதிரையை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.