பொங்கலை முன்னிட்டு நடைபெற இருக்கும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான விதிமுறைகளை அமைச்சர் ஆர். கே பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறாவயல் கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் வருகின்ற 17 ம் தேதி நடைபெற இருக்கும் மஞ்சிவிரட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர் ஆர்.கே பெரியகருப்பன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், மஞ்சுவிரட்டு குழு தலைவர் வேலுசாமி உள்ளிட்ட பலர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் பெரியகருப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மஞ்சுவிரட்டு கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார் . தற்போது கொரோனா தொற்றின் காரணமாக அரசு வழிகாட்டுதலின்படி மஞ்சுவிரட்டு நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும் வருவாய் துறை, கால்நடைத்துறை, மருத்துவ குழுவினர் என அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார் .