மேம்பாலம் அமைத்து தர வேண்டி அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பனங்கட்டான்குடி சாலையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இதனை கடந்து தான் பனங்காட்டான்குடி, அகரஎலத்தூர், கொண்டல், பெருமங்கலம், ஆதமங்கலம், புங்கனூர், மருதங்குடி, நிம்மேலி, வல்லுவகுடி, தென்னங்குடி, அகணி, பட்டமங்கலம், கோவில்பத்து மற்றும் சீர்காழி நகர் பகுதியிலிருந்து புறவழிச்சாலை வழியாக மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் 30 நிமிடத்திற்கு 1 முறை ரயில்கள் வந்து செல்வதால் அடிக்கடி இந்த ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதன் காரணமாக ஆபத்து நேரங்களில் தீயணைப்பு நிலைய வாகனம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முக்கிய வாகனங்கள் ரயில்வே கேட் திறக்கும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் 30 நிமிடங்களுக்கு 1 முறை இந்த ரயில்வே கேட் மூடப்படுவதால் சாலையின் இருபுறங்களிலும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெகுநேரமாக நிற்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு ரயில்வே கேட்டை திறக்கும் போது வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்று விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பனங்காட்டான்குடி சாலையிலுள்ள ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைத்து தருமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.