பாத்திரக்கடை வியாபாரியை கொலை செய்ய முயற்சி செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவனூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகை பாத்திரம் மற்றும் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் விஜயகுமார் ரயில்வே பாதையில் நடை பயிற்சி சென்று கொண்டிருக்கும் போது அங்கு வந்த விஜய் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கடேசன் உள்பட 5 பேர் சேர்ந்த கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த விஜயகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்திருப்பதாக கூறுகின்றனர். இதனை அடுத்து இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சுருளி, பழனி, தேவிகன் மற்றும் அஞ்சலை ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இருப்பினும் முக்கிய குற்றவாளியான விஜய் மற்றும் வெங்கடேசன் ஆகியோரை தேடி வந்த நிலையில், தற்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து 6 கத்திகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து தலைமறைவாக இருக்கும் அஜித், ஐயப்பன் மற்றும் அசோகன் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.