குடும்ப தகராறில் கணவனை கத்தியால் குத்திய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ் சென்னையில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்ற போது அவருக்கும் சென்னை மண்ணடி பகுதியில் வசிக்கும் சுரேகா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு அபிநயா, வெற்றிவேல் என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் வெளியூர்களுக்கு தான் வேலைக்கு செல்லும் இடங்களில் வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் நாயக்கன் தோப்பு பகுதியில் வாடகை வீட்டில் சந்தோஷ் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். தற்போது சந்தோஷின் மனைவி சுரேகா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சந்தோஷ் அடிக்கடி மது அருந்தி விட்டு சுரேகாவிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். மேலும் சந்தோஷ், சுரேகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் கடந்த சில வாரங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால் சுரேகா அதனை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த சந்தோஷ் சுரேகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு மீண்டும் தகராறு செய்துள்ளார்.
இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியதில் சந்தோஷ் அங்கிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சுரேகாவை வெட்ட முயன்றார். இதனை சுதாரித்துக்கொண்ட சுரேகா சந்தோஷிடம் இருந்த கத்தியை பிடுங்கி ஆத்திரத்தில் கணவர் என்றும் பாராமல் அவரது மார்பு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுரேகா விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி சரணடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சந்தோஷின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுரேகாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.