புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட ஆண்டுதோறும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச சேலை, வேட்டி மற்றும் துண்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த துணிகளைக் கொள்முதல் செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதால் துணிகளுக்கு பதிலாக பணத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைகளுக்கு வழங்கும் இலவச துணிக்குப் பதிலாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். பழங்குடியின இன மக்கள், மீனவர், நெசவாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீங்கலாக புதுச்சேரி ஒன்றியத்திலுள்ள 1,27,789 வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டை தாரர்களின் ஒரு நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கப்படும். இரண்டிற்கும் மேற்பட்ட குடும்ப நபர்களை கொண்ட அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் நேரடி பணப் பரிமாற்றம் மூலம் குடும்பத் தலைவி வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.