மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் பகுதியில் மீனவரான அலெக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முருகேசன் நகர் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் தலையில் கடுமையான ரத்த காயங்களுடன் அலெக்ஸ் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சிப்காட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பார்வையிட்டனர். அப்போது அங்கு மது பாட்டில்களும், டீசல் கேன்களும் கிடந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் அலெக்ஸின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அலெக்ஸ் அவரது நண்பர்களுடன் மது குடிக்க சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அலெக்ஸ் கற்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முன்விரோதம் காரணமாக அலெக்ஸ் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.